

புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்களுக்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற நீண்ட நாட்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துவதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், இந்தியாவின் ஆற்றல் மிக்க, ஒப்பற்ற பிரதமரான மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடிக்கு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், டுவிட்டரில் #HappyBdayPMModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.
பிரதமர் மோடி தனது பிறந்த நாளை இன்று வாரணாசியில் கொண்டாட உள்ளார். அங்குள்ள ஒரு மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் இன்று தனது நேரத்தை செலவிடுவதுடன், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலும் வழிபாடு செய்கிறார்.