

புதுடெல்லி
தேர்வுகள் பற்றிய கலந்துரையாடலை நடத்தவும், தேர்வு பயத்தைப் போக்கவும் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 7-ம் தேதி) இணைய முறையில் மாணவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். மாலை 7 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உள்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் வெற்றி பெற்று, பிரதமருடன் பேசினர். முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆண்டு இணைய வழியில் நிகழ்வு நடைபெற உள்ளது. இன்று மாலை 7 மணிக்கு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில், 81 நாடுகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாக ஒரு நாட்டின் பிரதமர் உரையாடுவதன் மூலம் உலகத்துக்கே இது முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார்.
இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடியின் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரபூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.