ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார். #AyushmanBharat
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

இந்திய பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார். சுமார் 50 கோடி பேர் பயன்பெறும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டமானது, உலகிலேயே மருத்துவ பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் துவங்கப்படும் பெரிய திட்டமாக கருதப்படுகிறது.

இத்திட்டத்தின் படி, ஓர் ஆண்டில் ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஆகும் மருத்துவ செலவை அரசாங்கவே ஏற்றுக்கொள்ளும். இதனால் 10.74 கோடி குடும்பங்கள் பயனடையும். இத்திட்டத்தின்கீழ் நாட்டின் எங்கு வேண்டுமானாலும், அரசாங்க மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் பயனாளர்கள் சிகிச்சை பெற முடியும். இந்தியாவின் ஏழை குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் நல்ல தரமான, சுகாதார வசதியை மலியான விலையில் பெற முடியும். சுமார் 15 ஆயிரம் மருத்துவமனைகளில் இருந்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைத்து கொள்ளும் படி அரசுக்கு விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், அவற்றில் 7,500 விண்ணப்பங்கள் தனியார் மருத்துவமனையை சேர்ந்தவை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனிடையே இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷாய்பஷா மற்றும் கோடெர்மா ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சிக்கிம் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாங்யாங் விமானநிலையத்தை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com