

புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 1,13,85,339 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,58,725 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த டிசம்பர் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரித்துள்ளது. குறிப்பாக நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பில் 85 சதவீதம் மராட்டியம், தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கொரோனா அதிகரிப்பு காரணமாக மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று முதல் 21ம் தேதி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும்படி மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
இந்நிலையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு தொடர்பாக, மார்ச் 17-ம் தேதி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி மாநிலத்தில் எந்த அளவுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும், தடுப்பூசி செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.