பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் ரூ.18,680 கோடி நிதி - பிரதமர் மோடி நாளை மறுநாள் வெளியிடுகிறார்

நாடு முழுவதும் உள்ள சுமார் 9.34 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் ரூ.18,680 கோடி நிதி - பிரதமர் மோடி நாளை மறுநாள் வெளியிடுகிறார்
Published on: 

புதுடெல்லி,

பி.எம். கிசான் திட்டத்தின் 24-வது தவணையாக ரூ.18,680 கோடி நிதியை, அக்டோபர் 30-ந்தேதி(நாளை மறுநாள்) குஜராத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

பி.எம். கிசான் திட்டம்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(பி.எம். கிசான்) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பி.எம். கிசான் திட்டத்தின் 24-வது தவணையாக ரூ.18,680 கோடி நிதியை குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் நாளை மறுநாள் நடைபெறும் தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

அரசு திட்டங்கள்

பிரதமர் மோடி வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு அரசு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். குஜராத்தின் தராத் மற்றும் ராதன்பூரில் இரண்டு உயிரி வாயு (CBG) ஆலைகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

மேலும், ரூ.328.77 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பாரத் கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் (BBBRC) மோடி திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம். கிசான் திட்டத்தின் 24-வது தவணை நிதியை விடுவிக்கும் நிகழ்ச்சி பில்தி பகுதியில் நடைபெற உள்ளது.

விவசாயிகளுக்கான நிதி

அந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான ரூ.18,680 கோடி நிதி விடுவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.34 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குஜராத்தில் மட்டும் 52.33 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் சுமார் ரூ.1,051 கோடி நிதியைப் பெற உள்ளனர்.

இதுவரை பி.எம். கிசான் திட்டத்தின் முந்தைய 23 தவணைகள் மூலம் தேசிய அளவில் ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com