

புதுடெல்லி,
பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜன.31) தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பிப்ரவரி 13-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இப்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில் கடைசியாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும்.
இந்நிலையில், மத்திய இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உறுப்பினர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்,
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய அரசு சர்ச்சைகள் இல்லாத மசோதாக்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக முக்கிய பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.