பிரதமர் மோடி சீனாவுக்கு 31-ந்தேதி பயணம்; ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி வருகிற 31-ந்தேதி சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2019-ம் ஆண்டுக்கு பின்னர் சீனாவுக்கு பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும். இதன்படி, சீனாவின் டியான்ஜின் நகருக்கு சென்று சேரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
இதன்பின்னர் ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்படர் 1 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் முன்னர், அவர் ஜப்பான் நாட்டுக்கு ஆகஸ்டு 30-ந்தேதி பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா உடன் இணைந்து, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
அதனை நிறைவு செய்த பின்னர் சீனாவுக்கு செல்வார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே ராணுவ வீரர்கள் அளவிலான மோதல் போக்கு ஏற்பட்டது. இதன்பின்பு, ராணுவ தளபதிகள் அளவிலான உயர்மட்ட கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்பின்பு, எல்லை பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் குயிங்டாவோ நகரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் பாதுகாப்பு மந்திரிகளுக்கான உச்சி மாநாடு கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி நடந்தது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகள் பங்கேற்றனர்.
அப்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார்.
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியான நிலையில், அதனை சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் விடுத்து விட்டு, பாகிஸ்தானில் நடந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் தாக்குதலை கூட்டறிக்கையில் சேர்க்க முனைந்துள்ளன.
ஆனால், பயங்கரவாதம் தொடர்புடைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்க முடியாது என மத்திய மந்திரி தெளிவுப்படுத்தினார். இந்த விவகாரத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுதுணையாக நிற்க வேண்டியது முக்கியம் என மத்திய அரசு வட்டாரங்களும் தெரிவித்தன.
ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த நிலையில், கூட்ட முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்படாது என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.
இதன்பின்னரே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இந்த சூழலில், சீனாவுக்கான பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் அமைகிறது.






