பள்ளி குழந்தைகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாட வேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள்

பள்ளி குழந்தைகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
பள்ளி குழந்தைகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாட வேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

இம்பால்,

அறிவியல் மாநாடு

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் 105-வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தையும், கண்டு பிடிப்புகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்த நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளது. நாட்டின் வளம் மற்றும் வளர்ச்சிக்காக எதிர்காலத்தில் தொழில்நுட்பங்களை முக்கியமாக அமல்படுத்துவதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும்.

நமது குடிமக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வங்கி அமைப்பு போன்ற துறைகளில் தடையற்ற சேவையாற்ற தொழில் நுட்பம் அனுமதிக்கும். எனவே மக்களின் அதிக பயன்பாட்டுக்காக விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளை ஆய்வகங்களில் இருந்து நிலத்தை நோக்கி நீட்டிக்க வேண்டும்.

மாநாட்டின் கருப்பொருள்

இந்த மாநாட்டின் கருப்பொருளான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வழியாக அடைய முடியாததை அடைதல் என்பது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் சாதாரண மக்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அறிவியல் நிச்சயம் உதவ வேண்டும்.

சூரியஒளி மின் உற்பத்தி மூலம் 2022-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் மின்உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிக திறன் கொண்ட சூரிய ஒளித்தகடுகளை உருவாக்குவதை விஞ்ஞானிகள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தயாரிக்க வேண்டும்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

நமது நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களை மாணவர்களுக்காக திறப்பதுடன், பள்ளி குழந்தைகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடுவதற்கான வழிமுறையையும் உருவாக்க வேண்டும்.

9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுடன் ஆண்டுக்கு 100 மணி நேரம் விஞ்ஞானிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதிக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன். இது இளைய சமூகத்தினரிடையே அறிவியல் மனநிலையை வளர்த்தெடுக்க உதவும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com