பூமி பூஜைக்கு முன் அயோத்தி அனுமன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

பூமி பூஜைக்கு முன் அயோத்தி அனுமன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொள்கிறார்.
பூமி பூஜைக்கு முன் அயோத்தி அனுமன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
Published on

அயோத்தி,

அயோத்தி ராமஜென்மபூமியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்காக வரும் பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். ராவணனை வீழ்த்தி விட்டு அயோத்தி திரும்பும் ராமபிரான் அந்த இடத்தை அனுமனுக்கு கொடுத்தார். அதனால் அந்த இடம் அனுமன்ஹார்கி என அழைக்கப்படுகிறது.

அயோத்தி செல்லும் பக்தர்கள் முதலில் அனுமன்ஹார்கியில் வழிபாடு செய்த பின்னரே ராமனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி பிரதமர் மோடியும் இன்று முதலில் அனுமன்ஹார்கியில் வழிபாடு செய்தபின்னரே பூமி பூஜையில் பங்கேற்கிறார். இதற்காக ஹனுமன்ஹார்கியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அலங்கார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இங்கு பிரதமர் சுமார் 10 நிமிடங்கள் இருந்தாலும், அவரை சந்திக்க கோவில் பூசாரிகளுக்கு அனுமதி இல்லை. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கருதி இந்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது அவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கோவில் பூசாரி மகந்த் தாஸ் கூறும்போது, கோவிலுக்கு வரும் பிரதமருக்கு கதாயுதம், கிரீடம், வெள்ளி கட்டி, துண்டு, தர்பன் போன்ற பொருட்களை பரிசளிக்க இருந்தோம். ஆனால் கொரோனா அச்சத்தால் எங்கள் திட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் அனைவரும் தொலைவிலேயே நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com