பிரதமர் மோடி பிறந்தநாள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய மந்திரி அமித்ஷா வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய மந்திரி அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி பிறந்தநாள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய மந்திரி அமித்ஷா வாழ்த்து
Published on

புதுடெல்லி,

குஜராத் முதல்-மந்திரியாக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் ஆளுமை மற்றும் பணியின் மீதான வலிமையால் அசாதாரணமான தலைமைத்துவத்தைக் கொண்டவர். நாட்டின் செழிப்பையும் மதிப்பையும் உயர்த்தியவர். தேச உணர்வில் நீங்கள் மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்கிறது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டின் பாரம்பரியம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் 'புதிய இந்தியா' என்ற பார்வையுடன் இணைத்துள்ளார். தனது வலுவான மன உறுதியுடனும், பொது நலனுக்கான உறுதியுடனும், சாத்தியமற்றதாகத் தோன்றும் பல பணிகளைச் செய்து ஏழைகளின் நலனுக்காக புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்காக உழைத்து, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்த தீர்க்கமான தலைவரை நாடு பெற்றுள்ளது. நாட்டு மக்களின் சுயமரியாதையை அதிகரிப்பதுடன், இந்தியா மீதான உலகளாவிய கண்ணோட்டமும் அவரது தலைமையில் மாறியுள்ளது. கடலின் ஆழத்தில் இருந்து விண்வெளியின் உயரத்திற்கு நாட்டின் கவுரவத்தை உயர்த்திய நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com