

புதுடெல்லி,
பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து ரூ.2.25 லட்சம் பிஎம் கேர்ஸ் (PM Cares) நிதித்திட்டத்திற்கு வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது பிரதம அமைச்சரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளையை பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி உருவாக்கினார். இதில் பிரதமர் மோடி தலைவராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இதில் யார் வேண்டுமானாலும் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் 5 நாட்களில் 3,076 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து ரூ.2.25 லட்சத்தை பிஎம் கேர்ஸ் நிதித்திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.