பிரதமர் மோடி வருகை: திருப்பரங்குன்றத்தில் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு

திருப்பரங்குன்றம் கோவில் முழுவதும் பாதுகாப்பு கருதி ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி வருகை: திருப்பரங்குன்றத்தில் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு
Published on

மதுரை,

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக வருகிற 1-ந் தேதி புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதற்காக நாளை (28-ந் தேதி) இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

மறுநாள் (1-ந் தேதி) காலை புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி சிறப்புரையாற்றுகிறார். அதனை முடித்து கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு புறப்படுகிறார். 2.45 மணிக்கு மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.பின்னர் கார் மாலை 4 மணிக்கு முருகப் பெருமானின் அறுபடை வீடான முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது. அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 4.30 மணிக்கு மண்டேலா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.பொதுக்கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி வருகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு செய்தனர். அது மட்டுமின்றி மதுரை மாநகர போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருப்பரங்குன்றம் கோவில் முழுவதும் பாதுகாப்பு கருதி ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இன்று முதல் கோவில் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதே போல் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர்.பிரதமர் வருகையை முன்னிட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com