வாரணாசியில் வளர்ச்சி பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி

வாரணாசியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
வாரணாசியில் வளர்ச்சி பணிகளை நள்ளிரவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி
Published on

வாரணாசி,

உத்தர பிரதேசத்தில் தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி நகருக்கு பிரதமர் மோடி நேற்று (திங்கட்கிழமை) வருகை தந்துள்ளார். அவர் வாரணாசியில் ரூ.339 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைத்து பேசினார்.

அவர் கூறும்போது, காசி விஸ்வநாதர் கோவிலின் இருண்ட பக்கம் தற்போது முடிவடைந்துள்ளது. 3 ஆயிரம் சதுர அடியில் இருந்த காசி விஸ்வநாதர் கோவில் வளாகம், தற்போது 5 லட்சம் சதுர அடியாக மாறியுள்ளது. இப்போது, 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கும் அதன் வளாகத்திற்கும் வரலாம் என்று கூறினார்.

இதன்பின், வாரணாசியில் பா.ஜ.க. முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் ஆகியோருடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டம் நள்ளிரவு வரை 6 மணிநேரம் நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் உடன் செல்ல, வாரணாசியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுபற்றி இன்று அதிகாலை 12.52 மணியளவில் தனது டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், காசியில் முக்கிய வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். இந்த புனித நகருக்கான சாத்தியப்பட்ட சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது நம்முடைய உயரிய முயற்சி என தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியின் நகர வருகையை அறிந்த உள்ளூர்வாசிகள் அந்த பகுதியில் திரண்டிருந்தனர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை காண்பதற்காக கூடியிருந்த மக்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்ததுடன் சிலருடன் உரையாடி விட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com