மோடியின் எச்சரிக்கை நிராகரிப்பு, மாட்டிறைச்சியை எடுத்து சென்றதாக ஒருவர் அடித்துக் கொலை

பிரதமர் மோடி இன்று காலை எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்றதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
மோடியின் எச்சரிக்கை நிராகரிப்பு, மாட்டிறைச்சியை எடுத்து சென்றதாக ஒருவர் அடித்துக் கொலை
Published on

ராஞ்சி,

நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமானது அதிகரித்து காணப்படுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து வரும்நிலையில் இதற்கு எதிராக போராட்டமும் தொடங்கியது. இந்த நிலையில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.

வன்முறையால் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது. சிறந்த ஒரு சமூகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை. இந்த நாட்டில் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இந்த எச்சரிக்கையை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடியின் எச்சரிக்கையானது நிராகரிக்கப்பட்டு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் செல்வதாக கூறி அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார். தடை செய்யப்பட்ட இறைச்சியை மாருதி வேனில் அன்சாரி எடுத்துச் சென்றதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. பஜார்தாத் கிராமத்தில் அவருடைய வேனை மறித்த கும்பல் அவரை கொடூரமாக தாக்கி உள்ளது. அவருடைய வேனிற்கு தீ வைத்து உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். போலீஸ் அதிகாரி ஆர்கே மாலிக் பேசுகையில் இது திட்டமிட்ட கொலையாகும் என குற்றம் சாட்டிஉள்ளார்.

அன்சாரி மீது ஏற்கனவே குழந்தை கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டுகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது, என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாட்டிறைச்சி வணிகத்தில் ஈடுபடும் சிலர் அன்சாரிக்கு எதிராக சதிதிட்டம் தீட்டி சிக்க வைத்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசு விவகாரம் தொடர்பாக மூன்று நாட்களில் நடைபெறும் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

கிரித் மாவட்டத்தில் பசுவை கொன்றதாக கூறி முஸ்லிம் நபர் மீது தாக்குதல் நடந்தது, அவருடைய வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. இச்சம்பவங்கள் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com