முதல்-மந்திரி நள்ளிரவில் 3 மணிநேரம் தவிப்பு; திருப்பி விடப்பட்ட விமானம்

காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா விமான படிக்கட்டுகளில் இருந்தபடி செல்பி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதல்-மந்திரி உமர் அப்துல்லா அவசர வேலையாக, டெல்லி செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடைய விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய தருணத்தில் வழி கிடைக்காமல், தரையிறங்காமல் வானிலேயே வட்டமடித்தது. இதனால், அப்துல்லா கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார்.
அவர் இதுபற்றி எரிச்சல் அடைந்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், டெல்லி விமான நிலையம் அலங்கோலத்துடன் காட்சியளிக்கிறது. மன்னிக்கவும், அமைதியாக இருப்பதற்கான மனநிலையில் நான் இல்லை. ஜம்முவை விட்டு புறப்பட்டு 3 மணிநேரம் வானிலேயே பயணித்தபடி இருந்தோம். எங்களுடைய விமானம் ஜெய்ப்பூர் நகருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
அதிகாலை 1 மணியளவில் விமானத்தில் இருந்து கீழே இறங்கி கொண்டிருக்கிறேன். சற்று புதிய காற்று வீசுகிறது. இந்த பகுதியில் இருந்து, எப்பொழுது கிளம்பி செல்வோம் என்பது தெளிவாக தெரியவில்லை என பதிவிட்டு உள்ளார். விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்தபடி செல்பி புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
ஜெய்ப்பூரில் நள்ளிரவில் அப்துல்லா உள்ளிட்ட விமான பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கியதும் தவித்தபடி அலைந்தனர். அதிகாலை 2 மணிவரை அவர் பயணித்த இண்டிகோ விமான நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் வெளியிடவில்லை. இதனால், பயணிகள் இடையே பரபரப்பு காணப்பட்டது.
இதன்பின்பு அதிகாலை 3 மணிக்கு பின்னர் டெல்லி வந்தடைந்தேன் என அப்துல்லா மற்றொரு பதிவை வெளியிட்டு உள்ளார்.