ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை இன்று நடத்துகிறார் பிரதமர் மோடி : சீனா, ரஷியா அதிபர்கள் பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாக நடத்துகிறார். அதில், சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கிறார்கள்.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ.) கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதில், கடந்த 2017-ம் ஆண்டு, இந்தியா, பாகிஸ்தான் சேர்ந்தன.

தற்போது, அந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. சுழற்சி முறையில், தற்போது அதன் தலைவராக இந்தியா உள்ளது.

இந்நிலையில், தலைவர் என்ற முறையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி மூலமாக இந்தியா நடத்துகிறது. பிரதமர் மோடி, மாநாட்டை முன்னின்று நடத்துகிறார்.

பாகிஸ்தான் பிரதமர்

சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இதர நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள். ஐ.நா., ஆசியான் உள்ளிட்ட 6 சர்வதேச, பிராந்திய அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் விவகாரம், உக்ரைன் போர் நிலவரம், ஷாங்காய் அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரித்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

வர்த்தகம்

இந்த அமைப்பில், புதிய நிரந்தர உறுப்பினராக ஈரான் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. பிராந்திய பாதுகாப்பு நிலவரம் பற்றியும், போக்குவரத்து தொடர்பு, வர்த்தகம் ஆகியவற்றை பெருக்குவதற்கான வழிகள் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. மாஸ்கோவில், தனியார் ராணுவம் கலகத்தில் ஈடுபட்டு, அமைதி திரும்பிய பிறகு புதின் பங்கேற்கும் முதலாவது நிகழ்ச்சி இதுவே ஆகும்.

லடாக்கில், இந்திய-சீன படைகள் 3 ஆண்டுகளாக எதிரும், புதிருமாக நிற்கையில், சீன அதிபர் இதில் பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com