

கொல்கத்தா
வங்க கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார்.
பின்னர் இந்த சேதங்கள் தொடர்பாக மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநில முதல்-மந்திரிகளுடன் அவர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இந்த கூட்டத்தில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கலந்து கொண்டார்.
ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியுடனான இந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டார். அதேநேரம் மாநிலத்தில் புயல் நிவாரண பணிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி வேண்டும் என அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.
பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பை புறக்கணித்த மம்தாவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மம்தா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-
யாஸ் புயலால் பாதிக்கப்பட்டு உள்ள மேற்கு வங்காள மக்களுடன் பிரதமர் மோடி உறுதியாக நிற்கும்போது, மம்தா பானர்ஜியும் தனது அகங்காரத்தை ஒதுக்கி வைத்து விட்டு மக்களின் மேம்பாட்டுக்காக நிற்க வேண்டும். ஆனால் பிரதமருடனான சந்திப்பை அவர் புறக்கணித்திருப்பதன் மூலம், அரசியல்சாசன நெறிமுறைகள் மற்றும் கூட்டாட்சி கலாசாரத்தை அவர் படுகொலை செய்துள்ளார்.
மம்தா பானர்ஜியின், மலிவான அரசியல் மீண்டும் ஒருமுறை மேற்கு வங்காள மக்களை பாதித்து இருக்கிறது.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
இதைப்போல ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், மம்தாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காள மக்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த பிரதமரிடம் இந்த மாதிரியான நடத்தையை வெளிப்படுத்தியது வலி தரக்கூடியது. அரசியல் வேறுபாடுகளை பொது சேவைகள் மற்றும் அரசியல்சாசன கடமைகளில் வைத்திருப்பதற்கு இது ஒரு துரதிர்ஷ்டவசமான உதாரணம். இது இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதிக்கிறது என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, நந்திகிராமில் ஏற்பட்ட தோல்வியால் மம்தா பானர்ஜி மிகுந்த கலக்கத்தில் இருப்பதாகவும், அதனால்தான் அவர் பிரதமரை அவமதிக்க முயன்றுள்ளதாகவும் பா.ஜனதா பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெர்வித்த மம்தா பானர்ஜி, "நான் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட முன்னதாகவே திட்டமிட்டுவிட்டேன். அதன்படி சாகர், திகா பகுதிகளுக்குச் சென்றேன். ஆனால், பிரதமர் திடீரென அவரது பயணத்தைத் திட்டமிட்டார். அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கையாக பிரதமர் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறார். அவர், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரையே சந்தித்தார்.
இருந்தும் கூட நான் எனது சகாக்களுடன் விமானத்தளத்தில் 15 நிமிடங்கள் வரை பிரதமரை சந்தித்து விட்டுத்தான் சென்றேன். சில திட்டவரைவுகளை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன். எனது பயணத்தைத் துவங்குவதற்கு முன் பிரதமரின் அனுமதியையும் பெற்றுச் சென்றேன்.
பிரதமர் தலைமையிலான வெள்ள பாதிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மட்டுமே பங்கேற்கவில்லை. அப்படியிருக்க பா,ஜனதா கட்சியினர் வினர் என்னை வசைபாடுகின்றனர்.
மேற்குவங்கத்தில் நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். அதனாலேயே நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்களா? எல்லாவிதமாகவும் எதிர்ப்பைக் காட்டி தோற்றுவிட்டதால் இப்படிச் செய்கிறீர்களா? என்னை இப்படி இழிவுபடுத்தாதீர்கள். எங்களுடன் தினம் தினம் சண்டை போட வேண்டாம்" என கூறி உள்ளார்.
மேலும் நான் "அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்" என்று கூறிய பானர்ஜி, கூட்டம் பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையில் இருக்க வேண்டும் என்று கருதும் போது பா,ஜனதா தலைவர்களும் கவர்னரும் மறுஆய்வுக் கூட்டத்திற்கு ஏன் அழைக்கப்பட்டனர் என்று கேட்டுள்ளார்.
மேற்கு வங்காள மக்களின் நலனுக்காக பிரதமர் என்னிடம் கால்களைத் தொடும்படி கேட்டால், நான் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன், ஆனால் நான் அவமதிக்கப்படக்கூடாது. என கூறி உள்ளார்.