பிரதமரின் கொள்கைகள், அமித்ஷாவின் யுக்திகளே வெற்றிக்கு காரணம்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமரின் கொள்கைகள், அமித்ஷாவின் யுக்திகளே வெற்றிக்கு காரணம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #YogiAdityanath
பிரதமரின் கொள்கைகள், அமித்ஷாவின் யுக்திகளே வெற்றிக்கு காரணம்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
Published on

கோரக்பூர்,

வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகலாயா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மேகாலயாவில் மொத்தமுள்ள 59 இடங்களில், காங்கிரஸ் 23 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 18 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள் 16 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக கூட்டணி 30 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. நாகா மக்கள் முன்னணி 29 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக விளங்கிய திரிபுராவில் முதல் முறையாக பாஜக பெரும்பலான இடங்களில் வெற்றி ஆட்சியை கைப்பற்ற உள்ளது. திரிபுராவில் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் ஒருவர். திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் கொள்கைகள், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் யுக்திகள் ஆகியவையே வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

கோரக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- திரிபுராவில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பாரதீய ஜனதா பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக கடுமையாக பணியாற்றிய தொண்டர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மோடி அரசின் சாதனைகளுக்கான வெற்றி இது. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வகுத்த கொள்கைகளும் இந்த வெற்றிக்கு காரணமாகும். மத்திய அரசு மீது வடகிழக்கு மாநில மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com