

புதுடெல்லி,
விவசாய கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு உரிய விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 60 வயதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
மேலும் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய டிராக்டர்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 23-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரில் இருந்து பஸ்கள், டிராக்டர்களில் பாரதீய கிசான் யூனியன் என்னும் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் அதன் தலைவர் நரேஷ் திகாயத் தலைமையில் டெல்லி ராஜ்காட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
எனினும் இந்த ஊர்வலம் உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி எல்லைகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து முக்கிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மட்டும் டெல்லியில் உள்ள மந்திரி ராஜ்நாத் சிங் வீட்டுக்கு பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டனர். அப்போது விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடந்த ஊர்வலம் மற்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உடனான பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் இருந்தும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகளை நள்ளிரவில் டெல்லிக்கு செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். இதனை அடுத்து அவர்கள் கிசான் காட் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.