பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸ் தீவிரம்

பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸ் நடவடிக்கையில் இறங்கியது. அவரது கூட்டாளிகள் சிக்கினர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸ் தீவிரம்
Published on

சண்டிகார், 

பஞ்சாப் பிரிவினைவாத தலைவன் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீஸ் நடவடிக்கையில் இறங்கியது. அவரது கூட்டாளிகள் சிக்கினர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அங்கு பிரிவினைவாதிகள் மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே அங்கு பிந்தரன்வாலே என்ற பிரிவினைவாதத் தலைவன் இதை ஒரு இயக்கமாக நடத்தினார். அவர் 1984-ம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அதிரடி உத்தரவால் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையில் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்துதான் காலிஸ்தான் தனிநாடு பிரிவினைவாத கோரிக்கை வலுவிழந்தது.

ஆனால் தற்போது மீண்டும் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுந்து வருகின்றன. இதன் பின்னால் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பு அரணாக நிற்கிறது. மறைந்த நடிகர், பாடகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் தற்போதைய தலைவர், அம்ரித் பால் சிங் (வயது 30) ஆவார். இவர், காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளினாலும், மத போதகத்தாலும் கடந்த 6, 7 மாதங்களாக பிரபலமாகி வருகிறார். தான் அடுத்த பிந்தரன்வாலே என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். வன்முறையை கட்டவிழ்த்து விடுவதில் அவர் கவனம் செலுத்துவது, பஞ்சாப் அரசுக்கு பெருத்த தலைவலியாக மாறி வருகிறது.

கடந்த மாதத்தில் இந்த அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி ஒருவர், ஒரு வழக்கில் அமிர்தசரஸ் புறநகரான அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.

அப்போது அம்ரித்பால் சிங்கும், அவரது ஆதரவாளர்களும் போருக்குப் போவது போல கைகளில் வாள்களையும், துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு சென்று தடுப்பு வேலிகளையெல்லாம் தகர்த்தெறிந்து அந்த போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து தங்கள் கூட்டாளியை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது ஏற்பட்ட மோதலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். பெரும் பதற்றமான சூழலைத் தவிக்க அம்ரித்பால் சிங் கூட்டாளியை போலீஸ் விடுவித்தது. இது, பிரிவினைவாதிகள் முன்பாக ஆம் ஆத்மி அரசு அடிபணிந்து விட்டது என்ற அவப்பெயரை சந்திக்க வைத்தது.

இந்த நிலையில் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய மாநில அரசு முடிவு எடுத்து அதற்கான அதிரடி நடவடிக்கையை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தொடங்கியது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் ஆலோசித்து மத்திய படைகளை பாதுகாப்புக்காக பெற்றுள்ளதைத் தொடர்ந்தே மாநில அரசு இதில் தீர்க்கமான முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் இதுவரையில் அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவருடைய நிதி விவகாரங்களை கையாள்கிற கூட்டாளி தல்ஜீத் சிங் கல்சியும் கைது செய்யப்பட்டு விட்டார் என தகவல்கள் கூறுகின்றன.

தப்பினார், அம்ரித்பால் சிங்

ஜலந்தரில் அம்ரித்பால் சிங் வாகன அணிவகுப்பை போலீஸ் இடைமறித்தபோது அவர் போலீஸ் வலையில் சிக்காமல், ஒரு மோட்டார் சைக்கிளில் சிட்டாகப் பறந்து தப்பித்து விட்டார் என அங்கிருந்து வரும் ஒரு தகவல் கூறுகிறது.

அம்ரித் பால் சிங்கைப் பிடிக்க மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றி ஜலந்தர் போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சஹல் கூறியதாவது:-

அவர் தற்போது ஓட்டம் பிடித்துள்ளார். நாங்கள் அவரைப் பிடிக்க வலை வீசி உள்ளோம். விரைவில் அவரை கைது செய்து விடுவோம். அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் 7 பேரை கைது செய்துள்ளோம்.

அம்ரித்பால் சிங்கை போலீஸ் படை துரத்தியது. அவரது வாகனத்தைத் தொடர்ந்து 25 கி.மீ. தொலைவுக்கு துரத்தினோம். அவரது வாகனம் முன்னணியில் இருந்தது. அதை சாதகமாக அவர் பயன்படுத்திக்கொண்டு, குறுகலான தெருக்களில் புகுந்தும், வாகனத்தை மாற்றிக்கொண்டும் தப்பினார். அவரது 2 வாகனங்களை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம். நாங்கள் அதிரடி படையினருடன் இணைந்து ஜலந்தரில் கொடி அணிவகுப்பு நடத்தினோம். சமூக நல்லிணக்கத்தை கெடுக்க அனுமதிக்க முடியாது. குற்றம் செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்ரித் பால் சிங்கை மடக்கிப்பிடித்து விட வேண்டும் என்ற தீவிர போலீஸ் நடவடிக்கைக்கு எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்பதற்காக மாநிலத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இணையதளச்சேவை, குறுந்தகவல் சேவை ஆகியவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. மாநிலமெங்கும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அம்ரித்பால் சிங்கை பிடிப்பதற்காக நடத்தப்படுகிற தேடுதல் வேட்டையில் இதுவரையில் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் போன்றவை சிக்கி உள்ளன.

ஜலந்தர் மாவட்டத்தில் அனாதையாக விடபட்டிருந்த கார் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது அம்ரித்பால் சிங்கின் வாகன அணிவகுப்பின் அங்கமாக இருந்த கார் என கூறப்படுகிறது. அந்தக் காரில் துப்பாக்கி, தோட்டாக்கள், வாள் உள்ளிட்டவை இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் 4 பேர் விமானம் மூலம் அசாம் மாநிலம், திப்ருகாருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அம்ரித் பால் சிங் தேடல் நடவடிக்கையினால் பஞ்சாப் மாநிலத்தில் ஒருவிதமான பரபரப்பான சூழல் நிலவுகிறது.

அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் 7 பேர் ஆயுதச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலை அமிர்தசரஸ் ஊரக போலீஸ் சூப்பிரண்டு சதிந்தர் சிங் வெளியிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வகையில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புதிதாக ஒரு வழக்கைப் போலீசார் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அஜ்னாலா சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com