கர்நாடக முன்னாள் மந்திரி வீட்டில் போலீசார் சோதனை

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் வாங்கிய விவகாரம் தொடர்பாக, கர்நாடக முன்னாள் மந்திரி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
கர்நாடக முன்னாள் மந்திரி வீட்டில் போலீசார் சோதனை
Published on

பெங்களூரு,

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய விவகாரத்தில் கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். மேலும் தலைமறைவான ஜனார்த்தனரெட்டியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிதி நிறுவன அதிபர் சையத் அகமது பரீத் என்பவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க ரூ.20 கோடி பேரம் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகள் பெற்றார். இதையடுத்து, ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகி விட்டார்.

ஜனார்த்தனரெட்டியை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர், ஐதராபாத்தில் தலைமறைவாக இருக்கலாம் என்பதால், அங்கு முகாமிட்டு ஒரு தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். அதே நேரத்தில் நேற்று முன்தினம் பெங்களூரு சாளுக்கியா சர்க்கிளில் உள்ள ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் பல்லாரி மாவட்டம் சிருகுப்பா ரோட்டில் உள்ள ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் நேற்று போலீசார் 9 மணி நேரம் சோதனை நடத்தினார்கள். அதன்பின்னர் ஓபளாபுரத்தில் உள்ள ஜனார்த்தனரெட்டியின் நிறுவனத்திலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜனார்த்தனரெட்டியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com