பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்; கேரளாவில் பயங்கரம்

மாணவியும் அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 16 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நீலம்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியும் அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 16 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, சிறுமி நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர், மாலை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிறுமியின் காதலனான பிளஸ் 2 மாணவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக பிளஸ் 2 மாணவன் கூறியுள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, நேற்று முன் தினம் மாலை பள்ளி முடிந்தப்பின் மாணவியை அழைத்துக்கொண்டு வனியம்பலம் ரெயில் நிலையம் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றதாகவும், அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளான்.
இதையடுத்து, சிறுவன் கூறிய இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அங்கு பள்ளி சீருடையில் சிறுமி கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சிறுமியின் காதலனான பிளஸ் 2 மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். காதலை முறித்துக்கொள்ளலாம் என சிறுமி கூறியதால் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக காதலன் கூறியுள்ளான். இந்த பயங்கர சம்பவம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






