பலாத்காரம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்... காவல்நிலையம் முன்பு இளம்பெண் விபரீத செயல்


பலாத்காரம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்... காவல்நிலையம் முன்பு இளம்பெண் விபரீத செயல்
x

காவல்நிலையம் முன்பு இளம்பெண் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த நீரஜ் என்ற இளைஞரை ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது. இதனிடையே, அந்த இளைஞர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு திருமணம் குறித்து பேசுவதை நீரஜ் நிறுத்திக் கொண்டார். இது குறித்து கேட்டபோது இளம்பெண்ணை நீரஜ் கடுமையாக திட்டியதோடு, அவரை தாக்கவும் செய்துள்ளார். இதில் அந்த பெண்ணின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சம்பந்தப்பட்ட இளைஞர் நீரஜ் மீது காவல்நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், கடந்த சில நாட்களுக்கு முன் காவல் நிலையத்திற்கு சென்று, நீரஜ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், புகார் அளித்து சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது அமைதியை சீர்குலைத்ததாக கூறி போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இருப்பினும், பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யாமல், பிரச்சினையை திசைதிருப்பும் நோக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக இளம்பெண் குற்றம் சாட்டினார். அதோடு, போலீசாரின் செயலை கண்டிக்கும் வகையில் விபரீத செயலில் ஈடுபட முடிவு செய்தார்.

இதன்படி நேற்று முன்தினம் மோடிநகர் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்ற இளம்பெண், தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்டு அங்கிருந்த போலீசார் உடனடியாக ஓடிச் சென்று அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினர். பின்னர் அந்தப் பெண் மோடிநகரில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீரஜ், அலகாபாத் ஐகோர்ட்டில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story