போலீசார் துப்பாக்கி சூடு: பீகாரில் பெண் போராட்டக்காரர்கள் கலெக்டரின் காலரைப் பிடித்ததால் பரபரப்பு

நிலைமை கையை மீறிச் சென்றபோதும், கலெக்டர் ஆனந்த் சர்மா ஆத்திரப்படாமல் கைகளைக் கூப்பி அமைதி காக்குமாறு பொதுமக்களிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார்.
போலீசார் துப்பாக்கி சூடு: பீகாரில் பெண் போராட்டக்காரர்கள் கலெக்டரின் காலரைப் பிடித்ததால் பரபரப்பு.
கலெக்டர் ஆனந்த் சர்மா
Published on: 

பாட்னா,

பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், ஆத்திரமடைந்த பெண்கள் மாவட்ட கலெக்டரின் காலரைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு

பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம் பாபுபர்ஹி காவல் எல்லைக்குட்பட்ட பலிராஜ்கர் கிராமத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காவல் உதவி ஆய்வாளர் (ஏஎஸ்ஐ) சந்திரமோகன் சிங் என்பவர் கிராம மக்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் அசோக் யாதவ் (வயது 50) என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையில் பிணத்தை வைத்து மறியல்

போலீசாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் கிராம மக்களும் கோஜ்பூர் பகுதியில் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

கலெக்டருடன் தள்ளுமுள்ளு

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ஆனந்த் சர்மா மற்றும் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) யோகேந்திர குமார் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்த சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். அதிகாரிகள் வந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குறிப்பாக பெண்கள், அவர்களைச் சூழ்ந்துகொண்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்குவாதம் முற்றியதில், கூட்டத்தில் இருந்த சில பெண்கள் மாவட்ட கலெக்டர் ஆனந்த் சர்மாவின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். மேலும், ஒரு பெண் தனது காலணியை கழற்றி அடிக்க முயன்றதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

கலெக்டரின் பொறுமை

நிலைமை கையை மீறிச் சென்றபோதும், கலெக்டர் ஆனந்த் சர்மா ஆத்திரப்படாமல் கைகளைக் கூப்பி அமைதி காக்குமாறு பொதுமக்களிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பாதுகாப்புப் படையினர் தலையிட்டு கலெக்டரைப் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

X