பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

ரவுடிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் இருப்பிடங்கள் குறித்த முக்கிய தகவல்களை அதிகாரிகள் சேகரித்தனர்.
சோதனை
Published on: 

பெங்களூரு,

பெங்களூருவில் போலீசார் நேற்று அதிகாலையிலேயே 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் வீட்டில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.

முதல் மந்திரி உத்தரவு

பெங்களூரு மாநகரில் ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தையும், குற்ற செயல்களையும் முற்றிலும் தடுக்க போலீசார் நேற்று அதிகாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரவுடி பட்டியலில் இடம் பெற்ற 100-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு நகரத்தில் நடக்கும் குற்ற செயல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல் மந் திரி டி.கே.சிவக்குமார் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை தொடர்ந்து. புதிதாக பொறுப்பேற்றுள்ள பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஆர்.ஹிதேந்திரா, போலீஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், ரவுடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ரவுடிகள் வீட்டில் சோதனை

அதன்படி, நேற்று அதிகாலை மத்திய குற்றப்பிரிவு, ரவுடித் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த போலீசார் இந்த நடவடிக்கையில் களமிறங்கினர். ரவுடி தடுப்பு பிரிவின் அதிகாரியும், போக்குவரத்து பிரிவு போலீஸ் கமிஷனருமான ஹேமந்த் நிம்பல்கர் இந்த சிறப்பு நடவடிக்கையை நேரடியாக வழி நடத்தினார்.

நகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ள ரவுடி பட்டியலின் அடிப்படையில், 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளுக்கு சென்ற போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். ரவுடிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் இருப்பிடங்கள் குறித்த முக்கிய தகவல்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

போலீசார் எச்சரிக்கை

மேலும், ஹென்னூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜோதி நகரில் உள்ள பிரபல ரவுடி 'கிஷோர்' என்ற 'குட்டே என்பவரது வீட்டிலும் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். சோதனையை கண்காணிக்க ரவுடி பிரிவு அதிகாரி ஹேமந்த் நிம்பல்கர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆர்.ஹிதேந்திரா ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பெங்களூருவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகாலையிலேயே நடந்த இந்த திடீர் சோதனையால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது.

X