

பெங்களூரு,
பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் நிலைய பகுதிகளில் திருட்டுப்போன செல்போன்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு, துணை கமிஷனர் மிதுன்குமார் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில், திருட்டுப்போன செல்போன்களை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், திருட்டு மற்றும் காணாமல் போன 692 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். அவற்றை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது மீட்கப்பட்ட 692 செல்போன்களையும், உரிமையாளர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் மிதுன்குமார் ஒப்படைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், ‘692 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இவற்றில் ஏராளமான செல்போன்கள் விலை உயர்ந்தவை ஆகும். பொதுமக்கள் தங்களது செல்போனை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். செல்போன்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
போலி செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்வது, செல்போனுக்கு வரும் லிங்குகளை கிளிக் செய்து தங்களை பற்றிய தகவல்களை தெரிவிப்பதே சைபர் மோசடி நடக்க காரணமாகும். செல்போன்கள் திருட்டுப்போனாலோ, தவறவிட்டாலோ அதுபற்றி பொதுமக்கள் கண்டிப்பாக போலீசில் புகார் அளிக்க வேண்டும்’ என்றார்.