போலீசார் வாட்ஸ்-அப் மூலம் நோட்டீஸ் அனுப்பக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு


போலீசார் வாட்ஸ்-அப் மூலம் நோட்டீஸ் அனுப்பக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு
x

வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பான பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் எழுந்தது.

புதுடெல்லி,

ஜாமீன் வழங்கும் விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு எதிராக சதேந்தர் குமார் ஆன்டில் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போலீசார் வாட்ஸ்-அப் மூலம் நோட்டீஸ் அனுப்பவது தவறானது என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் கோர்ட்டுக்கு உதவும்படி மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ராவை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுந்திரேஷ் மற்றும் ராஜேஷ் பிந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வக்கீல் சித்தார்த் லூத்ரா, ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதையும், ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் அத்தகைய தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் நோட்டீஸ் அனுப்பது அங்கீகரிப்பட்ட சேவையாகவோ அல்லது பரிந்துரைக்கப்பட்ட சேவைக்கு மாற்றாகவோ ஏற்க முடியாது. எனவே குற்றவியல் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட சேவை முறையின் மூலம் மட்டுமே நோட்டீஸ் அனுப்ப சம்பந்தப்பட்ட காவல்துறை அமைப்புகளுக்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலையான உத்தரவை வழங்க வேண்டும்" என தெரிவித்தனர்.

1 More update

Next Story