துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

அப்பகுதியை சேர்ந்த சாஹில் மகாஜன் என்ற தொழிலதிபருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார்.
உயிரிழப்பு
Published on: 

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜோகிந்தர் சிங், இவர் அப்பகுதியை சேர்ந்த சாஹில் மகாஜன் என்ற தொழிலதிபருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று பணிக்கு புறப்படுவதற்கு முன்பு, தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவில் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த ஜோகிந்தர் சிங், தனது அஸால்ட் ரைபிளை (துப்பாக்கி) சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அரசு மருத்துவமனை

அப்போது துப்பாக்கியில் தோட்டா சிக்கியிருந்ததை அவர் கவனிக்க தவறியதாக தெரிகிறது. இதன் காரணமாக துப்பாக்கி திடீரென வெடித்து, அதிலிருந்த தோட்டா ஜோகிந்தர் சிங் உடலில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து படுகாயமடைந்த அவரை, குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு பகுதி உதவி போலீஸ் கமிஷனர் பிரீத் இந்தர் சிங் தலைமையிலான குழுவினர், நேரில் ஆய்வு செய்து மேற்கண்ட சம்பவம் தொடர்பாகக் குடும்பத்தினரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். பின்னர் பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் 194-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

X