உதவி கேட்டு அழைப்பு விடுத்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

பாதிக்கப்பட்ட பெண் போலீஸ்காரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா கே.எம்.தொட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் புட்டசாமி (வயது 40). இவர் 112 அவசர உதவி மைய வாகன டிரைவராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே.எம்.தொட்டி பகுதியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுவதாக பெண் ஒருவர், புட்டசாமியை தொடர்பு கொண்டு பேசினார்.
அந்த பெண் திருமணமானவர். கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. அந்த அழைப்பை ஏற்ற புட்டசாமி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி கொண்டார். இதையடுத்து அடிக்கடி அந்த பெண்ணிடம் பேசிய அவர், நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது
இதையடுத்து பெண்ணின் வீட்டுக்கு சென்ற புட்டசாமி, அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரூ.12 லட்சம் வரை பெண்ணிடம் இருந்து கடனாக வாங்கினார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக புட்டசாமி அந்த பெண்ணை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது பேசுவது, பழகுவதை நிறுத்தி கொண்டார். இதை அறிந்த அந்த பெண் தான் கொடுத்த பணத்தை தரும்படி கூறினார். ஆனால் அதற்கு புட்டசாமி மறுத்துவிட்டார்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பெண் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் குடும்பத்தினர் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் போலீசில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி சமீபத்தில் அந்த பெண் கே.எம்.தொட்டி போலீசில் புட்டசாமி மீது புகார் அளித்தார். அந்த புகாரில், தன்னுடன் போலீஸ்காரர் புட்டசாமி நெருங்கி பழகி பலாத்காரம் செய்துவிட்டு ரூ.12 லட்சத்தை பறித்துவிட்டதாகவும், எனவே புட்டசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் புட்டசாமி, பெண்ணுடன் நெருங்கி பழகியதுடன், 4 முறை பலாத்காரம் செய்ததும், ரூ.12 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து புட்டசாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்காக அவரை தேடினர். ஆனால் பெண் புகார் அளித்ததும் அவர் பணிக்கு வராமல் தலைமறைவாகினார். இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






