சத்தீஷ்காரில் காவலரின் மனைவி, மகன் வீடு புகுந்து குத்திக் கொலை - கள்ளக்காதலி வெறிச்செயல்

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது வீட்டு வாசலில், கையில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் சரோஜினி நின்று கொண்டிருந்தார்.
சத்தீஷ்காரில் காவலரின் மனைவி, மகன் வீடு புகுந்து குத்திக் கொலை - கள்ளக்காதலி வெறிச்செயல்
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் துர்க் பகுதியில் வசித்து வருபவர் லலிதேஷ் யாதவ். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் இருந்த நிலையில், லலிதேஷ் யாதவுக்கு சரோஜினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடையில் கள்ளக்காதலாக மாறியது.

இதனிடையே, லலிதேஷ் மற்றும் சரோஜினியின் உறவில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சரோஜினி திடீரென லலிதேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த லலிதேஷ், சரோஜினியிடம் பேசி சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து, இன்றைய தினம் லலிதேஷ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் ரெயில் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ரெயில் நிலையம் சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி ரீனாவும், குழந்தைகளும் இருந்தனர். அந்த சமயத்தில் லலிதேஷ் வீட்டிற்கு சரோஜினி வந்துள்ளார்.

வீட்டில் லலிதேஷ் இல்லாததை தெரிந்து கொண்ட சரோஜினி, நேராக வீட்டிற்குள் நுழைந்து ரீனாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், சத்தம் வெளியில் கேட்காமல் இருப்பதற்காக ரிமோட்டை வைத்து டி.வி. சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளார். தொடர்ந்து சரோஜினி, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரீனாவை குத்தினார்.

எதிர்பாராத இந்த தாக்குதலால் ரீனா நிலைகுலைந்து தரையில் விழுந்தார். அத்துடன் நிறுத்தாத சரோஜினி, கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ரீனாவின் 9 வயது மகன் ஆதித்யாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். தொடர்ந்து ரீனாவின் மற்ற இரண்டு மகள்களையும் சரோஜினி தாக்க தொடங்கினார்.

இதற்குள் சுதாரித்து எழுந்த ரீனா, தனது மகள்களை காப்பாற்றுவதற்காக போராடினார். சரோஜினியின் கால்களை பிடித்துக் கொண்டு தனது மகள்களிடம் அங்கிருந்து தப்பியோடுமாறு ரீனா கூறினார். அவரது மகள்களில் ஒருவர் குளியலறையில் சென்று ஒளிந்து கொண்டார். மற்றொரு மகள் வெளியே ஓடிச் சென்று அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது வீட்டு வாசலில், கையில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் சரோஜினி நின்று கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் சரோஜினியை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கினர். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து ரீனாவையும், அவரது குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரீனாவும், அவரது மகன் ஆதித்யாவும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற இரண்டு மகள்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மறுபுறம் சரோஜினியை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்காதல் பிரச்சினையால் ஆத்திரத்தில் சரோஜினி இந்த தாக்குதலை நிகழ்த்தினாரா? அல்லது இது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com