அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமே நன்கொடை நிதி மந்திரி விதிமுறைகளை வெளியிட்டார்

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க புதிய கடிவாளம் போடப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் மூலமே இனி நன்கொடை வழங்க முடியும். #Politicalpartiesdonation
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமே நன்கொடை நிதி மந்திரி விதிமுறைகளை வெளியிட்டார்
Published on

புதுடெல்லி,

நமது நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நன்கொடைகள் வழங்குவதில் வெளிப்படையான தன்மை கிடையாது. யார் வேண்டுமானாலும், எந்த அரசியல் கட்சிக்கும் எவ்வளவு பெருந்தொகையையும் தேர்தல் நிதியாக வழங்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.

வருமான கணக்கில் காட்டாத பணத்தை, அரசியல் கட்சிகளுக்கு கருப்பு பண முதலைகள் நன்கொடை என்ற பெயரில் வாரி வழங்கிவிட்டு, தாங்கள் நிதி அளித்த கட்சி ஆட்சிக்கு வருகிறபோது, சலுகைகள் பெற இது வசதியாக அமைகிறது. ஊழலுக்கும் வழிவகுக்கிறது.

புதிய கடிவாளம்

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு புதிய கடிவாளம் போட முடிவு செய்தது.

அந்த வகையில், எந்த ஒரு அரசியல் கட்சியும், யாரிடம் இருந்தும் ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற முடியும்; யார், கூடுதல் தொகை நன்கொடை வழங்க வேண்டும் என்றாலும் அதை தேர்தல் பத்திரங்களாக வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் பத்திர விதிமுறைகள்

அந்த அறிவிப்பு இப்போது செயல்வடிவம் பெறுகிறது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நிதி அளிப்பதற்கான வழி,வகைகளை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று ஒரு அறிக்கையாக வெளியிட்டார்.

அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்காக ரூ.1,000, ரூ.10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு வருகிறது.

* தேர்தல் பத்திரங்களின் காவலனாக பாரத ஸ்டேட் வங்கி செயல்படும். பத்திரம் என்று இது அழைக்கப்பட்டாலும்கூட, அரசியல் கட்சிகளுக்கு உரிய பணம் போய்ச்சேருகிற வரையில், இது வட்டியில்லா கடன் ஆவணங்களாக (பிராமிசரி நோட்டு என்று அழைக்கப்படுகிற கடனுறுதி சீட்டு வடிவில்) இருக்கும்.

* தேர்தல் பத்திரங்களின் ஆயுள்காலம், வெறும் 15 நாட்கள் மட்டுமே. அந்த கால கட்டத்திற்குள், பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி விட வேண்டும். பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டில் மட்டும் இந்த 15 நாட்கள் அவகாசம், 30 நாட்களாக கொள்ளப்படும்.

* தேர்தல் பத்திரங்களை பெறுகிற அரசியல் கட்சிகள், உரிய வங்கி கணக்கின் மூலம்தான் வங்கியில் செலுத்தி, அவற்றை பணமாக்கிக்கொள்ள முடியும்.

* தேர்தல் பத்திரங்கள், பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டும், ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 10 நாட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

* தேர்தல் பத்திரங்களில் யார் பணம் செலுத்தி அவற்றை வாங்குகிறார்களோ, அவர்களது பெயர் குறிப்பிடப்பட மாட்டாது. ஆனால், அவற்றை யார் வாங்குகிறார்களோ, அவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை (கே.ஒய்.சி.) அந்த பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தெரிவிக்க வேண்டும்.

* இந்திய குடிமக்களும், இந்தியாவில் பதிவு செய்த அமைப்புகளும் இந்த பத்திரத்தை வாங்குவதற்கு தகுதி படைத்தவர்கள்.

* தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள், அதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் கணக்கு காட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இப்படி தேர்தல் பத்திரங்கள் வாயிலாகத்தான் அரசியல் கட்சிகளுக்கு பெருந்தொகைகளை நிதியாக வழங்க முடியும் என்கிறபோது, அவற்றுக்கு நிதி அளிப்பதில் வெளிப்படைத்தன்மை வந்து விடும்; கருப்பு பணத்தை அரசியல் கட்சிகளுக்கு யாரும் வாரி வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com