கெஜ்ரிவால் ஒரு பொய்யர்; அரசியல் சுற்றுலா செல்கிறார்- சித்து கடும் விமர்சனம்

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
கெஜ்ரிவால் ஒரு பொய்யர்; அரசியல் சுற்றுலா செல்கிறார்- சித்து கடும் விமர்சனம்
Published on

அமிர்தசரஸ்,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தாங்கள் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். பஞ்சாப்பில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுப்பது மூலம் கிடைக்கும் பணம் எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பயன்படும் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

கெஜ்ரிவாலின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடுமையாக தாக்கி உள்ளார்.

பஞ்சாப்பில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சித்து கூறியதாவது:-

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அரசியல் சுற்றுலாப் பயணி. மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக போலி வாக்குறுதிகளை அளிப்பவர்.டெல்லியில் 8 லட்சம் வேலைகள் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் 440 மட்டுமே கொடுத்துள்ளார்.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதாக கூறும் கெஜ்ரிவால், அவரது கட்சி தலைமை தாங்கும் டெல்லியில் உள்ள பெண்களுக்கு இந்த தொகையை வழங்குகிறாரா ? கெஜ்ரிவாலுக்கு ஒன்று சொல்கிறேன். உங்களுக்கு பஞ்சாப் பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் ஒரு அரசியல் சுற்றுலா பயணி. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு போலி வாக்குறுதிகளுடன் இங்கு வரும் பொய்யர். நீங்கள் ஏன் கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு வரவில்லை? என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com