

பிரிஸ்டன் (அமெரிக்கா)
பாஜகவின் அரசியல் கொள்கைகளில் சிறுபான்மையினருக்கும், பழங்குடியினருக்கும் இடமின்றி இருப்பதாக அம்மக்கள் கருதுகிறார்கள், இதையே ராகுல் துருவநிலை அரசியல் என்று குறிப்பிடுகிறார்.
இருபத்தோராம் நூற்றாண்டு அரசியலில் நீங்கள் சில பிரிவினரை விலக்கி வைத்தால் அது பிரச்சினையை உருவாக்கும். ஆகையால் எனது பார்வையில் ஒரு சமூகத்தினரை மற்றொருவருக்கு எதிராக நிறுத்துவது வேறு சிலர் அந்த இடைவெளிக்குள் நுழைந்து பிரச்சினைகளை ஏற்படுத்த ஏதுவாகும். உங்களுக்கு யார் அவ்வாறு உள்ளே நுழைந்து பிரச்சினைகளை கொடுப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை என்று மறைமுகமாக பாகிஸ்தானை குறிப்பிட்டார் ராகுல். இந்தியாவில் 100 மில்லியன் பழங்குடியினரின் மத்தியில் பாஜக குறித்து நல்லதொரு பார்வையில்லை என்றார் அவர்.
பாரம்பரியமாக இந்தியாவின் பலம் என்பது மக்களை அரவணைத்து நம் அமைப்பிற்குள்ளேயே வளரச் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதேயாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் நல்லிணக்கத்தை சிதைப்பதையே ஆகப்பெரும் பிரச்சினையாக நான் காண்கிறேன் என்றார் ராகுல்.
அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உருவாக்குவதே தனது வேலைகளில் பெரியதொரு பகுதியை கொண்டுள்ளது என்றார் ராகுல். அதில் வேலையின்மையை எப்படி ஒழிப்பது என்பது குறித்து அதிகமான கவனம் செலுத்தப்படும். அப்பார்வை விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உதவும் என்றார் ராகுல்.