

ஸ்ரீநகர்,
ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகள் கழித்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலை அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் பிடிபி ஆகியவை புறக்கணித்துள்ளன. நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, மூன்று கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்த நிலையில், 4-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
காலை 6 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியின் 6 மாவட்டங்களில் உள்ள 8 நகராட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இவற்றில் வெறும் இரண்டு உள்ளாட்சி வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. மீதமுள்ளவற்றில், யாருமே போட்டியிடவில்லை. பள்ளத்தாக்கு பகுதியில், வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு உள்ளூரில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.