புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்க துணை நிலை கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டு உள்ளார்.
புதுச்சேரி,
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவையும், இலவச வேட்டி, சேலை ஆகியவையும் இடம்பெறும். இதுதவிர இந்த ஆண்டு கையில் ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுக்கு ரொக்கம் வழங்க திட்டமிடப்பட்டது. அங்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கும் திட்டம் தான் அமலில் இருக்கிறது. அதன்படி, 2026ம் ஆண்டு பொங்கலுக்கு 4,000 ரூபாய் வழங்கலாம் என்று முதல் மந்திரி ரங்கசாமி ஏற்கனவே அறிவித்தார். இதற்காக ரூ.140 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று துணை நிலை கவர்னரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் போதிய நிதி இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.
அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் பொங்கல் பரிசில் சிறிய மாற்றம் செய்துள்ளனர். அதன்படி, புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுக்கு 3,000 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. அதாவது, புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்க துணை நிலை கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டு உள்ளார். இந்த உதவித்தொகை விரைவில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.






