

பெங்களூரு,
கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். முதல் நாளில் மாநில எல்லை மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்காக கன்னட மொழி தேர்வு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது நாளில் இயற்பியல், வேதியியல் பிரிவு தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவிகளின் கம்மல், மூக்குத்தி, மோதிரம் போன்றவற்றை அதி காரிகள் அகற்றினர். சில மாணவிகளின் மூக்குத்திகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவை தெரியாமல் 'டேப்' போட்டு ஒட்டிவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று கடைசி நாள் தேர்வு நடைபெற்றது. உயிரியல், கணித பிரிவு தேர்வு நடைபெற்றது. பெங்களூரு மடிவாளாவில் உள்ள கிருபாநிதி கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு நேற்று காலை 5 மாணவர்கள் வந்தனர். அவர்களின் மேல் சட்டையை அதிகாரிகள் அகற்றி பார்த்தபோது, 5 மாணவர்களும் பூணூல் போட்டிருந்தனர். அவற்றை அகற்றும்படி அறிவுறுத்தினர்.
நீங்கள் தேர்வு எழுத விரும்பினால் பூணூலை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இது குறிப்பிட்ட சில சமூகங்களின் புனித நூலாக கருதப்படுகிறது.
இதை அறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர் அந்த தேர்வு மையத்துக்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சிவமொக்கா, பீதர் போன்ற பல்வேறு மையங்களில் மாணவர்களின் பூணூல் அகற்றப்பட்டன. கடந்த ஆண்டே இத்தகைய நிகழ்வு நடைபெற்றது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால். இனி பூணூல் அகற்றப்பட மாட்டாது என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த நிகழ்வு நடை பெற்று உள்ளது. இது கர்நாடகாவில் புயலை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர் கூறுகையில், தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ் அரசு இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் தாலி, பூணூல் தொடர்ந்து அகற்றப்படுகிறது. ஒருபுறம் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன் னொருபுறம் இந்துக்களின் நம்பிக்கைககள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இது காங்கிரஸ் அரசின் தவறான அரசியலை வெளிப்படுத்துகிறது. இதற்கு யார் பொறுப்பு என்பதை அரசு கூற வேண்டும்.காங்கிரஸ் என்ற நவீன முஸ்லிம் லீக் அரசு அதிகாரப்பூர்வ மற்ற முறையில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துகிறது. ரம்ஜான் பண்டிகையின் போது உருது பள்ளிகளின் நேரத்தை இந்த அரசு மாற்றுகிறது. மற்றொரு புறம் இந்துக்களின் தாலி, பூணூலை அகற்றுகிறது. இது இந்து விரோத அரசு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மாணவர்களின் பூணூலை அகற்றிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பாய்ந்துள்ளது. கடந்த ஆண்டும் இதே சர்ச்சை எழுந்த போது, பூணூலை கழற்றச் சொல்லக் கூடாது என அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், மீண்டும் இப்படி நடந்திருப்பதை சுட்டிக்காட்டி, "இந்து விரோத செயல்" என பாஜக சாட, மாநில அரசு தொடர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.