சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு


சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 30 Jun 2025 5:30 AM IST (Updated: 30 Jun 2025 1:55 PM IST)
t-max-icont-min-icon

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வின் முன்ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரித்தது.

புதுடெல்லி,

காதல் விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்டான். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பூவைஜெகன்மூர்த்தி சார்பில் வக்கீல் ராம்சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சக நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரர் ஜெகன்மூர்த்தி இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டு உள்ளார். மனுதாரர் எம்.எல்.ஏ. என்பதால் குறைதீர் கோரிக்கைகளுடன் அணுகுவது வாடிக்கை. அவ்வாறு காணாமல் போன சிறுவனின் தாயார் மனுதாரரை அணுகியபோது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆலோசனை அளித்தார்.

பரிசீலிக்காமல் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து தவறிழைத்துள்ளது. வழக்கு விசாரணைக்கு மனுதாரர் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வரும் சூழலில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என ஐகோர்ட்டு தெரிவித்திருப்பது தவறானது. மனுதாரர் கைது செய்யப்பட்டால் தொகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தடுக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story