ஆபாச சி.டி. விவகாரத்தில் தான் ஜோதிடர் யுவராஜ் கைது செய்யப்பட்டார்: கர்நாடக எம்.எல்.ஏ பசனகவுடா பட்டீல் யத்னால்

ஆபாச சி.டி. விவகாரத்தில் தான் ஜோதிடர் யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ
பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ
Published on

பா.ஜனதாவை சேர்ந்த சர்ச்சைக்கு பெயர் போன பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வெள்ளித்தட்டில் உணவு

பெங்களூருவில் ஆபாச சி.டி. தயாரிக்கும் குழுக்கள் உள்ளன. அதை வைத்து மிரட்டுவது அவர்களின் தொழில். ஜோதிடர் யுவராஜூம் இதே காரணத்திற்காக தான் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தனையோ அரசியல்வாதிகள், யுவராஜிடம் பணம் கொடுத்து எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரி பதவி வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். அந்த யுவராஜ் முதல்-மந்திரியின் வீட்டிலேயே இருந்தார்.

அவர் தற்போது நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கிறார். ரூ.50 கோடியில் அவர் வீடு கட்டியுள்ளார். அவரது வீட்டுக்கு வருபவர்களுக்கு வெள்ளித்தட்டில் உணவு பரிமாறியுள்ளார். சி.டி.யை வைத்துக் கொண்டு மிரட்டும் தொழிலை செய்து வந்தார். அவர் பா.ஜனதா தேசிய அளவிலான நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

கண்டுபிடிக்க வேண்டும்

ஆனால் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா ஆகியோருடன் அவர் இருக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியே வரவில்லை. சிலர் மந்திரி பதவியை பெற நடிகைகளை டெல்லிக்கு அழைத்து சென்றனர். அத்தகையவர்கள் தற்போது மந்திரி ஆகியுள்ளனர். ஆபாசி சி.டி. பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறியுள்ளார். அவர் கூறிய இந்த கருத்தில் உண்மை உள்ளது. அவர் 20 ஆண்டுகள் காங்கிரசில் இருந்துள்ளார். அந்த அனுபவத்தில் அவர் தனது கருத்தை கூறியுள்ளார்.

ஆபாச சி.டி. தயாரிக்கும் பணியை 2 பேர் செய்கிறார்கள். அதில் ஒருவர் பா.ஜனதாவிலும், இன்னொருவர் காங்கிரசிலும் உள்ளனர். அவர்கள் யார் என்பதை ஊடகத்தினரே கண்டுபிடிக்க வேண்டும். ஆபாச சி.டி. விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவறு. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து இருக்க வேண்டும்.

தலையிட முடியும்

எஸ்.ஐ.டி. விசாரணையில் இங்கு இருப்பவர்கள் தலையிட முடியும். ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் யாரும் தலையிட முடியாது. பிராமணர் சாதிக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை கர்நாடகத்தில் இன்னும் அமல்படுத்தவில்லை. இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அரசு உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்த குழுவுக்கு அரசு

காலக்கெடு விதிக்கவில்லை. இது சரியல்ல. இந்த உயர்மட்ட குழு அமைத்ததை நாங்கள் ஏற்கவில்லை.

பஞ்சமசாலி சமூகத்திற்கு எப்போது இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கும் என்பதை முதல்-மந்திரி தெளிவாக கூற வேண்டும். இதுகுறித்து வருகிற 15-ந் தேதி சட்டமன்றத்தில் கேட்பேன். அவர் சரியான பதில் கூறாவிட்டால் நான் தர்ணா போராட்டம் நடத்துவேன்.

இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.

பசனகவுடா பட்டீல் யத்னால் குற்றச்சாட்டு கூறிய யுவராஜ் மோசடி வழக்குகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com