டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் காரணம்: வீடியோ கிடைத்துள்ளது - பிரகாஷ் ஜவடேகர் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தான் காரணம், வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் காரணம்: வீடியோ கிடைத்துள்ளது - பிரகாஷ் ஜவடேகர் பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், சாலைகளில் வாகனங்கள், டயர்களை எரித்தும் வெறியாட்டம் போட்டனர்.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகளும் நிகழ்ந்தது. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. இந்தநிலையில் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 30 பேர் உயிரிழந்த நிலையில் வன்முறையில் படுகாயமடைந்து மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 270 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இந்தநிலையில் வன்முறை தொடர்பாக குடியரசு தலைவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்த நிலையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள் தான் காரணம். சிஏஏ போராட்டங்களை தூண்டும் வகையில் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி நடந்து கொள்கின்றனர். கையில் ஆயுதத்துடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தாகீர் உசேன் வீடு ஒரு கலகத் தொழிற்சாலை என்பதைக் காட்டும் வீடியோக்கள் உள்ளன. வன்முறைக்குத் தயாராவதற்காக அவரது வீட்டில் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களைப் பார்த்தோம். ஆனால் இந்த இரு கட்சிகளும் இது குறித்து மவுனம் சாதிக்கின்றன.

நாங்கள் விசாரணையை ஆரம்பித்து டெல்லியில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இத்தகைய அரசியலை நாங்கள் கண்டிக்கிறோம்.

கொலிஜியம் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே நீதிபதி முரளிதர் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

தாகிர் உசேன் ஏற்கனவே தனது அறிக்கையை வழங்கியுள்ளார், அதில் வன்முறையின் போது மர்ம கும்பல் தனது வீட்டிற்குள் நுழைவது குறித்து போலீசார் மற்றும் ஊடகங்களுக்கு அனைத்து விவரங்களையும் கொடுத்ததாக கூறியுள்ளார். அவர் காவல்துறையிடம் பாதுகாப்பும் கோரியிருந்தார். போலீசார் எட்டு மணி நேரம் தாமதமாக வந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவரது வீட்டிலிருந்து மீட்டனர் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் நிகழ்ந்த வன்முறையின் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட சதி உள்ளதாகவும், வன்முறைச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சா அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா சோனியா காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com