போலீஸ் அதிகாரி தற்கொலை வழக்கு: கர்நாடக மந்திரி கேஜே ஜார்ஜ் மீது சிபிஐ வழக்கு பதிவு

கர்நாடக போலீஸ் அதிகாரி தற்கொலை வழக்கில் கர்நாடக மந்திரி கேஜே ஜார்ஜ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
போலீஸ் அதிகாரி தற்கொலை வழக்கு: கர்நாடக மந்திரி கேஜே ஜார்ஜ் மீது சிபிஐ வழக்கு பதிவு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் கணபதி. இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யும் முன்பாக தனியார் கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், போலீஸ் மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ், ஐ.பி.எஸ். அதிகாரிகளான பிரணாவ் மொகந்தி, ஏ.எம்.பிரசாத் ஆகியோர் தனக்கு பணியின் போது தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு ஏதாவது நடந்தால், அவர்கள் 3 பேரும் தான் பொறுப்பு என்றும் தெரிவித்து இருந்தார்.

கணபதி தற்கொலை குறித்து மடிகேரி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் கணபதி தற்கொலைக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான் காரணம் என்று கணபதியின் குடும்பத்தினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு சித்தராமையா உத்தரவிட்டார். ஆனால், குடும்பத்தினர் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைதொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினார்கள். போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரம் தொடர்பாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரணாவ் மொகந்தி, ஏ.எம்.பிரசாத் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெயர் முதல் குற்றவாளியாகவும், 2-வதாக பிரணாவ் மொகந்தியையும், 3-வதாக ஏ.எம்.பிரசாத்தையும் சேர்த்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் 3 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் எந்த நேரமும் விசாரணை நடத்தலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த கர்நாடக போலீசார், மந்திரி மீது எந்த குற்றமும் இல்லை என கூறி வழக்கை முடித்தது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com