நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்தது - இஸ்ரோ அறிவிப்பு

பிரக்யான் ரோவர் ‘ஸ்லீப் மோட்’ நிலைக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Image Courtesy : @isro twitter
Image Courtesy : @isro twitter
Published on

பெங்களூரு,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் 'சந்திரயான்-3' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த 'விக்ரம்' லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய 'பிரக்யான்' ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது. இந்த நிலையில் நிலவில் 14 நாட்கள் பகல் பொழுது முடிவடைந்துள்ளது. அடுத்த 14 நாட்கள் இரவுப்பொழுதாக இருக்கும் என்பதால் ரோவர் இனி 'ஸ்லீப் மோட்' என்ற நிலைக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நிலவில் 'பிரக்யான்' ரோவர் அதன் பணிகளை நிறைவு செய்தது. தற்போது அது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு 'ஸ்லீப் மோட்' நிலைக்கு சென்றுள்ளது.

APXS மற்றும் LIBS பேலோடுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த பேலோடுகளில் இருந்து தரவுகள் லேண்டர் வழியாக பூமிக்கு அனுப்பப்படுகிறது.

ரோவரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. சோலார் பேனல் செப்டம்பர் 22, 2023 அன்று சூரிய உதயத்தின் போது ஒளியைப் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. ரிசீவர் ஆன் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் பணியை தொடர்வதற்காக ரோவர் விழித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில், நிலவுக்கான இந்தியாவின் தூதராக ரோவர் எப்போதும் அங்கு நிலைத்திருக்கும்."

இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com