‘தீய சக்தி’ குறித்து பிரக்யா சிங் தாக்கூர் கூறிய கருத்து: காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

பா.ஜ.கவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துவதாக அக்கட்சியின் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
‘தீய சக்தி’ குறித்து பிரக்யா சிங் தாக்கூர் கூறிய கருத்து: காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
Published on

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றவர் பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் குறித்து இவர் கூறிய கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதம் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர், அருண்ஜெட்லி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து போபாலில் பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கலந்து கொண்டு பேசிய போது, தமது கட்சியினருக்கு எதிராக எதிர்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துவதால் தான் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவதாக குறிப்பிட்டார்.

பிரக்யாவின் இந்த கருத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு பொறுப்பான பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், இது போன்ற நபர்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி நன்கு சிந்தித்திருக்க வேண்டும். அரசியல், ஒரு குறிப்பிட்ட அளவிலான தரத்தைக் கொண்டிருக்க வேண்டும். தற்சமயம் இந்திய அரசியலின் தரத்தை நிலைநிறுத்துவது ஒரு முக்கியமான மற்றும் அச்சுறுத்தும் பணியாகிவிட்டது. அரசியல் துறையிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ ஒருவர் அதன் தரத்தை தாழ்த்த முயன்றால், அது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com