பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரண் அடைய வேண்டும் - குமாரசாமி வேண்டுகோள்

பிரஜ்வல் ரேவண்ணா 48 மணி நேரத்தில் இந்தியா வந்து சரண் அடைய வேண்டும் என்று குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பெங்களூரு,

ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா 48 மணி நேரத்தில் இந்தியா வந்து சரண் அடைய வேண்டும் என்று குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் அரசின் ஓராண்டு கால ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு எல்லா சாதனைகளையும் சொல்லிக் கொள்கிறது. ஆனால் ஆபாச வீடியோ அடங்கிய பென் டிரைவ் பற்றி மட்டும் சொல்வது இல்லை. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து பேசவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வறட்சியால் விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். விவசாயிகளுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை. நீர்ப்பாசன திட்டங்களின் நிலை என்ன? மழையால் பெங்களூருவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை மக்கள் பாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முக்கியமான துறைகளில் 35 ஆயிரத்து 471 கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது தான் அரசின் சாதனையா? நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மந்திரிகள் யாராவது மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனரா? துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நகர்வலம் மேற்கெண்டு மழை பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளார். கடந்த முறையும் அவர் இதை செய்தார். என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

இது வெறும் விளம்பர அரசு. அரசின் திட்டங்கள் குறித்து விளம்பரம் வழங்கியதே இந்த அரசின் சாதனை ஆகும். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் என் மீதும், தேவேகவுடா மீதும் மரியாதை இருந்தால் 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரண் அடைந்து தைரியமாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இந்த மண்ணின் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். எதற்காக பயப்பட வேண்டும். அவர் தவறு செய்திருந்தால் தண்டனை கிடைக்கட்டும். இன்னும் எத்தனை நாட்கள்தான் இந்த போலீஸ்-திருடன் ஆட்டத்தை பார்ப்பது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com