பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டு ரத்து செய்யப்படுமா..? - விளக்கம் அளித்த மத்திய அரசு

ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடகாவின் முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இது தொடர்பான புகாரின் பேரில் கர்நாடகாவின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஜெர்மனியில் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடகாவின் முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய அவர், "பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜெர்மனி பயணம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அரசியல் அனுமதி கோரப்படவில்லை. விசா குறிப்பும் வெளியிடப்படவில்லை. தூதரக பாஸ்போர்ட்டு வைத்திருப்பவர்கள் ஜெர்மனிக்கு செல்ல விசா தேவையில்லை" என்றார்.

தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய வெளியுறவு அமைச்சகம் பரிசீலிக்குமா என நிருபர்கள் கேட்டதற்கு "இது தொடர்பாக கோர்ட்டில் இருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com