பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரணாப் முகர்ஜி நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், சுவாச தொற்று பிரச்சினை இருப்பதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. எனினும் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com