கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்த புகைப்படம் குறித்தும், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய 4 தலைமை நீதிபதிகள் குறித்தும் பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. கடந்த மாதம் 22-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு பிரசாந்த் பூஷணுக்கும், டுவிட்டர் நிறுவனத்துக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன்பிறகு நடைபெற்ற விசாரணையின் போது பிரசாந்த் பூஷண், மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டு போட்டு நிறுத்திவைக்கப்பட்டு இருந்ததை பார்க்காமல் அப்படியொரு கருத்தை கூறிவிட்டேன். ஸ்டாண்டு போட்ட மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருப்பதற்கு ஹெல்மெட் தேவையில்லை என்பதை உணர்கிறேன். எனவே எனது கருத்தில் இடம்பெற்ற அந்த பகுதிக்கு வருந்துகிறேன். ஆனால், மற்ற பகுதிகளுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று விளக்கம் அளித்து இருந்தார்.

அவருடைய தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், அவர் கோர்ட்டை எந்தவகையிலும் அவமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் கடந்த 5-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றம் புரிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து வருகிற 20-ந்தேதி வாதங்கள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com