மன்னிப்பு கோர முடியாது; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கோர முடியாது; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே, ஹார்லி டேவிட்சன் பைக் மீது அமர்ந்திருந்த புகைப்படம் குறித்தும், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய 4 தலைமை நீதிபதிகள் குறித்தும் சமூக செயல்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இதற்கிடையே தலைமை நீதிபதி போப்டே குறித்து வெளியிட்ட கருத்துக்கு பூஷண் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் முன்னாள் நீதிபதிகள் குறித்த (கடந்த ஆறு ஆண்டுகளில் தேசத்தின் ஜனநாயகத்தை அழிப்பதில் நாட்டின் முந்தைய நான்கு தலைமை நீதிபதிகள் பங்கு வகித்தனர்) கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.

இந்த அவமதிப்பு வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவித்தது. அவருக்கான தண்டனை குறித்து கடந்த 20 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு மீண்டும் விசாரித்தது. இதில் விசாரணை துவங்கியதும் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை எதுவும் வழங்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.

பிரசாந்த் பூஷண் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, கோர்ட்டு அவமதிப்புக்கான தண்டனை குறித்த விசாரணையை வேறொரு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தண்டனையை அறிவிப்பதை ஒத்திப்போடுவது தொடர்பான மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், நீதிமன்றம் பூஷனின் கோரிக்கையை நிராகரித்து, அவருடைய கருத்தினை மறுபரிசீலனை செய்யவும் மன்னிப்புக் கோரவும் மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தது. இன்றுடன் மூன்று நாள் அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், பூஷன் தனது விமர்சனங்களுக்கு மன்னிப்புக்கோரப் போவதில்லை என தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் என்னுடைய விமர்சனத்திற்கு நான் மன்னிப்புக் கோருவதென்பது உண்மையற்றதாக இருக்கும் என்றும், அப்படிக் கோருவது நான் மிகுந்த மதிப்பிற்குரிய ஒரு நிறுவனத்தை அவமதிப்பதாக இருக்கும் என்றும் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com