

மும்பை,
மராட்டியத்தில் கணவன் தாக்கியதில் கர்ப்பிணி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கர்ப்பிணியின் கணவர் மீதும் அவரது தாயார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் முப்ரா பகுதியை சேர்ந்த இளைஞருக்கு திருமணமாகி மனைவி இருந்தார். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதியுடன் இளைஞரின் தாயாரும், கர்ப்பிணியின் மாமியாருமான பெண் வாழ்ந்து வந்தார்.
இதனிடையே, அடமானம் வைக்கப்பட்ட நகையை மீட்பது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சினை நிலவி வந்தது. மேலும், குழந்தை வேண்டாம் என கூறி வந்த கணவன், கருவை கலைக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கூறி வந்தார். மேலும், இளம்பெண்ணின் மாமியாரும் தனது மகனின் கருத்துக்கு ஆதரவு அளித்து வந்தார். இதனால், கணவரும், அவரது தாயாரும் சேர்ந்து இளம்பெண்ணிடம் அவ்வப்போது வாக்குவாதம், தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு கர்ப்பிணியிடம் அவரது கணவர் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது தாயாருடன் சேர்ந்து கர்ப்பிணி மனைவியை கணவர் தனது காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் தரையில் சரிந்து விழுந்த கர்ப்பிணி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த கர்ப்பிணியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த கர்ப்பிணியின் கணவரிடமும், அவரது மாமியாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மாமியார் தாக்கியதில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.