

புதுடெல்லி,
ரெயில்களில் பயணம் செய்யும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இனி அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக கீழ் படுக்கைகளை எளிதாக முன்பதிவு செய்யும் புதிய திட்டத்திற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை கர்ப்பிணி பெண்கள் ரெயில்களில் கீழ் படுக்கை வசதியை பெற வேண்டுமானால், ரெயில் நிலையங்களில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு கவுண்டர்களுக்கு நேரில் சென்று, மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் கர்ப்பிணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
டெல்லி ஐகோட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் எதிரொலியாக, இந்த நடைமுறை தற்போது மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இனி பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாகவே இந்த வசதியை டிஜிட்டல் முறையில் சுலபமாக பெறலாம். இதனால் கர்ப்பிணி பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமம் குறைவதுடன், பயணத்துக்கு முன்கூட்டியே திட்டமிடுவதும் எளிதாகும்.
ஆன்லைன் முன்பதிவின் போது சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தேவையில்லை என்றாலும், பயணத்தின் போது தகுதியான மருத்துவ பரிசோதகர் வழங்கிய சான்றிதழை பயணிகள் கைவசம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது அதை காட்ட தவறினால், ரெயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 138-ன் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.
மேலும், ஒருவேளை ஆன்லைன் புக்கிங்கில் கீழ் படுக்கை கிடைக்காத பட்சத்தில், ரெயிலில் ஏதேனும் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால்,டிக்கெட் பரிசோதகர்கள் தங்களின் கையடக்க கணினி மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதனை ரெயிலிலேயே ஒதுக்கீடு செய்து தருவார்கள்.
ரெயில்வே வாரியத்தின் இந்த டிஜிட்டல் அறிவிப்பு கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.