தேசிய கீதம் இசைத்தபொழுது மயக்கம்; பெண் காவலரின் உடல்நலம் விசாரித்த ஜனாதிபதி

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றின் இறுதியில் தேசிய கீதம் இசைத்தபொழுது மயங்கி விழுந்த பெண் காவலரிடம் ஜனாதிபதி உடல்நலம் குறித்து கேட்டறிந்து உள்ளார்.
தேசிய கீதம் இசைத்தபொழுது மயக்கம்; பெண் காவலரின் உடல்நலம் விசாரித்த ஜனாதிபதி
Published on

புதுடெல்லி,

டெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய கார்ப்பரேட் சமூக பொறுப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதன்முறையாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு பிரிவில் சிறந்த பங்காற்றிய நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாகூர், கார்ப்பரேட் விவகார செயலாளர் இஞ்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு பணிக்காக முன்வரிசையில் நின்றிருந்த டெல்லி பெண் காவலர் ஒருவர் அதிக சோர்வால் தரையில் விழுந்துள்ளார். பின்பு எழுந்து அமர்ந்து இருக்கிறார்.

தேசிய கீதம் இசைத்து முடிந்த பின் மந்திரிகள் நிர்மலா மற்றும் அனுராக்குடன் பேசிய ஜனாதிபதி கோவிந்த் தனது காவலர்களுடன் மேடையில் இருந்து இறங்கி பெண் காவலரிடம் சென்று உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார். உடன் இருந்த மந்திரி அனுராக் தனது கையில் வைத்திருந்த குடிநீர் பாட்டிலை கொடுத்துள்ளார்.

அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை பெண் காவலருக்கு உதவி செய்யும்படி மத்திய மந்திரி நிர்மலா கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து அந்த அறையில் இருந்து பெண் காவலர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.

தேசிய கீதம் இசைத்து முடிந்ததும் பொதுவாக ஜனாதிபதி உடனடியாக அங்கிருந்து சென்று விடுவது வழக்கம். ஆனால் மயங்கி விழுந்த பெண் காவலரின் உடல்நலம் பற்றி அவர் விசாரித்தது அறையில் இருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜனாதிபதி சென்ற பின் அந்த அறையில் இருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com